தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மேளம், நாதஸ்வரம் இசைத்து கரகம் ஆடி வந்த இசைக்கலைஞர்கள்


தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு மேளம், நாதஸ்வரம் இசைத்து கரகம் ஆடி வந்த இசைக்கலைஞர்கள்
x
தினத்தந்தி 13 April 2021 4:52 PM GMT (Updated: 13 April 2021 4:52 PM GMT)

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மேளம், நாதஸ்வரம் இசைத்தும், கரகம் ஆடியும் இசைக்கலைஞர்கள் வந்தனர். திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அவர்கள் கூறினர்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்ட அனைத்து நாடக மற்றும் நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அப்போது கலைஞர்கள் கோலாட்டம் ஆடியும், மேளம் நாதஸ்வரம் இசைத்தும், கரகம் ஆடியும் வந்தனர்.பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர் அதில் கூறியிருப்பதாவது:-

2018-ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் எங்களின் கலை நிகழ்ச்சி பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர், 2019 பாராளுமன்ற தேர்தலால் கலைநிகழ்ச்சி புறக்கணிப்பு செய்யப்பட்டது. 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல் என எங்கள் கலைஞர்கள் கலை வாழ்வு நசுக்கப்பட்டு கலைஞர்கள்வறுமையின் பிடியில் இருந்து வந்த நாங்கள் தற்காலத்தை நம்பி திருவிழா மற்றும் சுபகாரிய விழாவை நம்பிதான் இருந்தோம்.

அரசு தடை

இப்போது திருவிழாவுக்கும், சுபகாரியங்களுக்கும் அரசு தடை செய்துள்ளதால், நாங்கள் எங்கள் கலை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றோம். இந்த கலை நிகழ்ச்சியின் வருமானத்தை வைத்துதான் எங்கள் குடும்ப வாழ்வாதாரம், குழந்தைகள் படிப்பு, மருத்துவம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுவோம். ஆனால் அரசின் விழா தடை சட்டத்தால் கலைஞர்களாகிய நாங்கள் வீதியில் பிச்சைதான் எடுக்க வேண்டி வரும் நிலைக்கு தள்ளபடுவோம். எங்களுக்கு கலையையும் கலைச்சார்ந்த வாழ்வையும் தவிர வேறு ஒன்றும் தெரியாது. கலையே எங்களுக்கு உயிர் மூச்சு. ஆகையால் கிராமிய கலைகளை நம்பி பிழைத்து வந்த எங்களுக்கு, அரசு குடும்ப பராமரிப்பு தொகையாக கலை பண்பாட்டு துறையில் பதிவு பெற்ற கலைஞர்களுக்கு ரூ.20,000 ஆயிரம் தந்து உதவ வேண்டுகிறோம்.

பாதுகாக்க வேண்டும்

எங்களுக்கு கொடி பிடிக்கவோ, கோசம் போடவோ, போராட்டம் செய்யவோ தெரியாது. கலையையும், கலை சார்ந்த வாழ்வாதாரத்தையும் மட்டும் நம்பி இருக்கும் எங்கள் வாழ்வாதாரத்தை தமிழக அரசு வயிற்றில் அடிக்க வேண்டாம். ஏற்கனவே, நாட்டுப்புற கலைஞர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள். மீதமுள்ளவர்கள் இந்த மண்ணையும், மரபையும் காத்து வருகின்ற எங்களை பாதுகாத்து உதவிட அரசு முன்வரவேண்டும். தவறினால் கலைஞர்களாகிய நாங்கள் அழிவின் பாதையை நோக்கி செல்ல நேரிடும். ஆகையால் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது தோடு, நிவாரணம் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story