இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள்


இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள்
x
தினத்தந்தி 13 April 2021 11:50 PM IST (Updated: 13 April 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் அறுவடை முடிந்த நிலங்களில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்பட்டு உள்ளன. இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

நாகப்பட்டினம்;
நாகையில் அறுவடை முடிந்த நிலங்களில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்பட்டு உள்ளன. இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். 
அறுவடை
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடியை மேற்கொண்டனர். இந்த நிலையில் தொடர் புயல்கள் மற்றும் கனமழை காரணமாக சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. பல்வேறு இன்னல்களுக்கு இடையே எஞ்சிய நெற்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்தனர். இதைத்தொடர்ந்து விளை நிலங்களில் உளுந்து, பச்சைபயறு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து, தற்போது அதன் அறுவடை பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அறுவடை முடிந்த பெரும்பாலான வயல்களில் தற்போது வைக்கோல்கள் தேங்கிக் கிடக்கின்றன.
ஆடுகள்
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்வதற்கு நாகை விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்காக நாகை, திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், பாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அறுவடை முடிந்த விளை நிலங்களில் உரமேற்ற செம்மறி ஆட்டு பட்டிகளை ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து களமிறக்கியுள்ளனர். வயல்களில் களம் இறக்கப்பட்டு உள்ள செம்மறி ஆடுகள், அறுவடைக்குப்பின் வயல்கள், வரப்புகளில் கிடைக்கும், வைக்கோல்கள் பச்சை புல் பூண்டுகளை மேய்ந்து வருகின்றன. 
இயற்கை உரம்
இந்த ஆடுகளின் கழிவுகள் வயலுக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுகிறது. ஆடுகள் மேய்ச்சலுக்கு கடைமடை பகுதி வயல்களில் விடப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு இயற்கை உரம் தாராளமாக கிடைக்கும். ஆட்டின் கழிவு சிறந்த இயற்கை உரம் என்பதால் இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் இரவு நேரங்களில் பட்டி போட்டு ஆடுகளை அடைத்து கொள்ள அனுமதி அளிப்பதுடன் ஆடு மேய்ப் பவர்களின் சாப்பாடு செலவுக்கும் பணம் கொடுக்கின்றனர். ஆடுகள் மூலம் கிடைக்கும் இயற்கை உரத்தால் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். 

Next Story