வலங்கைமான் பகுதியில் கொட்டித்தீர்த்த கோடை மழை
வலங்கைமான் பகுதியில் நேற்று கோடை மழை கொட்டித்தீ்ர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வலங்கைமான்;
வலங்கைமான் பகுதியில் நேற்று கோடை மழை கொட்டித்தீ்ர்த்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொட்டித்தீர்த்த கோடை மழை
வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. வலங்கைமான் பகுதியில் காலை 10.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்யத்தொடங்கிய மழை பின்னர் கனமழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் 1½ மணி நேரம் வரையில் அதாவது பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடைவிடாது பருவமழையை போன்று வெளுத்து வாங்கியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தி ஆழ்துளை கிணறு பாசனம் மூலம் வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் கோடை சாகுபடி, முன் பட்ட குறுவை நெல் சாகுபடி, பருத்தி, எள் உள்பட தானியங்களும் சாகுபடி செய்துள்ளனர்.நேற்று பெய்த கோடை மழை விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் வரையில் அதிகபட்ச கோடை வெயில் தாக்கம் இருந்த நிலையில் மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த கோடை மழையால், சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களில் அதிகப்படியாக ஒரு மாத காலத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் பணப் பயிர்களான வாழை, தென்னை, வெற்றிலை, மக்காச்சோளம், காய்கனி, மலர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் இந்த கோடை மழை தங்களுக்கு மிகுந்த பயன் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story