சேலத்தில் பரிதாபம்: போலீஸ் பஸ் ஏறியதில் தொழிலாளி சாவு


சேலத்தில் பரிதாபம்: போலீஸ் பஸ் ஏறியதில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 14 April 2021 1:59 AM IST (Updated: 14 April 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போலீஸ் பஸ் ஏறியதில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம்:
சேலத்தில் போலீஸ் பஸ் ஏறியதில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளிப்பட்டறை தொழிலாளி
சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிக்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று காலை வேலை சம்பந்தமாக மோட்டார் சைக்கிளில் நெத்திமேட்டில் இருந்து லீ பஜாருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்த முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதவே, நிலை தடுமாறி சாலையில் பாண்டியன் விழுந்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த போலீஸ் பஸ் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி பாண்டியன் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கண்காணிப்பு கேமரா
இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போலீஸ் பஸ் ஏறியதால் ஒருவர் இறந்து போனார் என்ற சம்பவம் பரவியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது சாலையில் தவறி விழுந்த பாண்டியன் மீது போலீஸ் பஸ் ஏறி இறங்கும் பரபரப்பான காட்சி பதிவாகி இருப்பது தெரிந்தது. இந்த விபத்து நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story