மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேச்சேரி:
மேச்சேரி அருகே மின்வாரிய ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மின்வாரிய ஊழியர்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே பள்ளிப்பட்டி ஊராட்சி நல்லியண்ணன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 56). இவர் சேலம் உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், தமிழ் செல்வி என்ற மகளும் செல்வகுமார், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இவர்களில் செல்வக்குமார் அதே பகுதியில் உள்ள நொரச்சி வளவை சேர்ந்த தமிழ் நிதி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று சவுந்தர்யா கதவை பூட்டிக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதை மாமியார் பானுமதி தட்டி கேட்டார்.
அப்போது சவுந்தர்யா, மாமியாரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. மேலும் அவர் தனது தந்தை தமிழ் நிதிக்கு செல்போனில் தகவல் சொல்லி வரவழைத்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை தமிழ் நிதி, தாயார் சித்ரா, அண்ணன் பிரசாந்த், தம்பியான 17 வயதுடைய கல்லூரி மாணவர் ஆகிய 4 பேரும் கோவிந்தன் வீட்டுக்கு வந்து தட்டிக்கேட்டுள்ளனர்.
4 பேர் மீது வழக்கு
அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து கோவிந்தனை தாக்கியதுடன் அரிவாள், மண்வெட்டியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 9-ந் தேதி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கோவிந்தன் கொலை சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்நிதி குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் சிறப்பு தனிப்படையினர் இந்த கொலை வழக்கு தொடர்பாக, பிரசாந்த் வயது (22), அவருடைய தம்பியான 17 வயது கல்லூரி மாணவர் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தமிழ்நிதி, அவருடைய மனைவி சித்ரா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story