வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்
வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என தொல். திருமாவளவன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என தொல். திருமாவளவன் கூறினார்.
அஞ்சலி
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். அவரது உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவர், மாதவராவ் மகள் திவ்யா ராவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாதவராவ் இறந்த செய்தி கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். கொரோனா என்ற கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை எவையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையம்
தடுப்பூசி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்ற தகவல் பரவுகிறது. அனைவரும் தடுப்பூசி கண்டிப்பாக போட்டு கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசாரத்தில் மம்தா பானர்ஜி பேச தேர்தல் ஆணையம் தடை விதித்து இருப்பதை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் தில்லுமுல்லு நடக்குமோ என்ற அச்சம் மக்களிடத்தில் உள்ளது. வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
நிச்சயம்
தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நிச்சயமாக வெற்றி பெறும். கண்டிப்பாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
தோல்வி பயத்தின் காரணமாக அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
படுகொலை
அரக்கோணம் இரட்டை கொலை என்பது மது போதையின் காரணமாக ஏற்பட்ட கொலை அல்ல. அது அப்பட்டமான சாதி படுகொலை. அரசியல் பகையின் விளைவாக ஏற்பட்ட படுகொலை.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வெற்றி பெறுவது உறுதி. மாதவராவ் வெற்றி பெற்று நடைபெறும் இடைத்தேர்தலில் தகுதியுடைய மாதவராவின் மகள் திவ்யாராவிற்கு காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story