மிளகாய் பொடி தூவிய உணவை சாப்பிட வைத்து கொடுமை: 2 மகன்களை நரபலி கொடுப்பதாக மிரட்டிய தாய், தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு


மிளகாய் பொடி தூவிய உணவை சாப்பிட வைத்து கொடுமை: 2 மகன்களை நரபலி கொடுப்பதாக மிரட்டிய தாய், தந்தை உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 April 2021 4:28 AM IST (Updated: 14 April 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

மிளகாய் பொடி தூவிய உணவை 2 மகன்களுக்கு சாப்பிட வைத்து கொடுமைப்படுத்தி, அவர்களை நரபலி கொடுப்பதாக மிரட்டிய தாய், தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு
மிளகாய் பொடி தூவிய உணவை 2 மகன்களுக்கு சாப்பிட வைத்து கொடுமைப்படுத்தி, அவர்களை நரபலி கொடுப்பதாக மிரட்டிய தாய், தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2-வது திருமணம்
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மனைவி பாக்கியம் (வயது 60). இவர்கள் தங்களது 2 பேரன்களுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
எங்களது மகள் ரஞ்சிதாவுக்கு ராமலிங்கம் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது மருமகன் ராமலிங்கம், இந்துமதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அதை எங்களது மகள் ரஞ்சிதா ஏற்றுக்கொண்டு, அவர்கள் 3 பேரும் எங்களது பேரன்களுடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்கள். மேலும், இந்துமதிக்கு பழக்கமான சசி என்கிற தனலட்சுமி என்ற பெண்ணும் அவர்களுடன் தங்கி உள்ளார்.
நரபலி
அவர்கள் 4 பேரும் சேர்ந்து எங்களது 2 பேரன்களுக்கு சரியாக உணவு கொடுக்காமலும், துணிகளை துவைக்க வைத்தும், சூடு போட்டும், மிளகாய் பொடி தூவிய உணவை சாப்பிட வைத்தும் கொடுமைப்படுத்தி வந்தார்கள். மேலும், 2 பேரன்களையும் நரபலி கொடுத்தால்தான் சிவனுடைய சக்தி கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பேரன்கள் எங்களை தேடி வந்தனர். இதை தட்டி கேட்டதற்கு தங்களது குடும்ப விஷயம் என்றும், பேரன்களை அனுப்பி வைக்குமாறும் மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு தாலுகா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 2 மகன்களை கொடுமைபடுத்தியதாக தாய் ரஞ்சிதா, தந்தை ராமலிங்கம் மற்றும் இந்துமதி, சசி என்கிற தனலட்சுமி ஆகிய 4 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story