மலைத்தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்
முத்தூர் அருகே தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும்போது மலைத்தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.
முத்தூர்
முத்தூர் அருகே தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும்போது மலைத்தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.
மலைத்தேனீக்கள்
முத்தூர் அருகே வேலம்பாளையம் கிராமத்தில் விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் நேற்று காலை 7 மணிக்கு தென்னை மரங்களின் மேல் ஏறி நின்று கொண்டு தேங்காய் வெட்டும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த மலைத்தேனீக்கள் திடீரென்று எதிர்பாராதவிதமாக தேன் கூட்டிலிருந்து கூட்டம். கூட்டமாக பறந்து வந்து தேங்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சரமாரியாக கொட்டின.
இதனால் நிலைகுலைந்த தேங்காய் வெட்டும் தொழிலாளர்கள் வலி பொறுக்க முடியாமல் தப்பித்தால் போதும் என்று, தென்னை மரத்திலிருந்து வேகமாக கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். மேலும் தென்னந்தோப்பின் கீழே தேங்காய் எடுத்து போடும் பணிக்காக நின்றுகொண்டிருந்த சில தொழிலாளர்களையும் மற்றும் அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த பொதுமக்களையும் விரட்டி விரட்டி கொட்டின.
10 பேர் காயம்
இதில் தேங்காய் வெட்டும் தொழிலாளர்கள் பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுவெங்கரையாம்பாளையத்தை சேர்ந்த ராசு வயது 60, மனோகரன்55, ஜெகதீசன் 20, உள்பட மொத்தம் 10 பேர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைத்தேனீக்களின் கொட்டுதலில் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story