சாதகமற்ற சீதோஷ்ண நிலையால் பயறு, உளுந்து விளைச்சல் குறைவு கொள்முதல் விலையும் குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை
சாதகமற்ற சீதோஷ்ண நிலையால் பயறு, உளுந்து விளைச்சல் குறைந்து விட்டது. கொள்முதல் விலையும் குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி முடிந்த பின்னர் வயல்களில் பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயறு, உளுந்து சாகுபடி பரப்பு குறைந்தது.
மேலும் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது பயறு மற்றும் உளுந்து அறுவடை நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக நடந்து வரும் அறுவடையினை தொடர்ந்து பயறு மற்றும் உளுந்து செடிகள் காய வைக்கப்பட்டு பின்னர் டிராக்டர் அல்லது தொழிலாளர்களை கொண்டு போரடித்து தானியங்கள் சேகரிக்கப்படும்.
விளைச்சல் குறைவு
இவ்வாறு சேகரிக்கப்படும்போது தானியங்களின் மகசூல் கணக்கிடப்படுவது வழக்கம். சாதாரணமாக சரியான தட்ப வெப்பநிலை நிலவும் நேரத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் 300 கிலோ வீதம் பயறு, உளுந்து மகசூல் இருக்கும்.
இந்த ஆண்டு சீதோஷ்ண நிலை சரியாக இல்லாததால் உளுந்து, பயறு விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது ஒரு ஏக்கருக்கு 50 முதல் 100 கிலோ வரை மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.
கொள்முதல் விலையும் குறைவு
பயறு செடிகள் அறுவடை செய்தல் மற்றும் போரடித்து தானியங்கள் சேகரித்தல் ஆகிய பணிகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் எந்திரங்களை பயன்படுத்தும்போது கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதே நேரத்தில் மகசூல் செய்யப்பட்ட தானியங்களை விற்பனை செய்யும்போது கொள்முதல் விலையும் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு 100 கிலோ பச்சைப்பயறு ரூ.7 ஆயிரத்துக்கும், உளுந்து 100 கிலோ ரூ.9 ஆயிரத்துக்கும் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது பச்சைப்பயறு 100 கிலோ ரூ.6 ஆயிரத்து 500 என்ற அடிப்படையிலும், உளுந்து 100 கிலோ ரூ.8 ஆயிரத்து 500 முதல் ரூ.9 ஆயிரம் என்ற அடிப்படையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகள் கவலை
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் உற்பத்தி செலவு ஏற்பட்டுள்ள நிலையில், மகசூலும் குறைந்து, கொள்முதல் விலையும் குறைந்திருப்பது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. சாகுபடி செய்யப்படும் பயறு, உளுந்து தானியங்களை அரசே கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்தால் நிலையான விலை கிடைக்கும். மேலும் பயறு, உளுந்து விளைச்சல் பாதிக்கப்படும்போது இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படுவதில்லை.
மாறாக பயறு மற்றும் உளுந்து சாகுபடிக்கு இன்சூரன்ஸ் கட்டணம் மட்டும் ஆண்டுதோறும் செலுத்தி வருகிறோம். ஆனால் ஒரு முறை கூட பயறு, உளுந்துக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவதில்லை. இதனையும் அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவிரி டெல்டா பகுதியில் இன்னும் ஒரு சில தினங்களுக்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுவும் பயறு, உளுந்து அறுவடையை வெகுவாக பாதிக்கும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story