தஞ்சையில் முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு
தஞ்சையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதையொட்டி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை பார்த்ததும் முககவசம் அணியாத வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர்.
தஞ்சாவூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தஞ்சை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் முக கவசம் அணியாமல் யாரும் உள்ளே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன.
அதையும் மீறி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அபராதம் வசூலிக்கும் பணி
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நேற்று போலீசார் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மறித்து அவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.
இதை தவிர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அபராதம் வசூலித்து வருகின்றனர். தஞ்சை ரெட்டிப்பாளையம் பகுதிகளிலும் நேற்று தஞ்சை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அபராதம் வசூலிக்கும் பணிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு உறுதுணையாக போலீசாரும் செயல்பட்டனர்.
ஆணையர்- போலீசார்
தஞ்சை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பிரபாகரன் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி சுந்தரம், ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவி குழந்தையம்மாள் ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர் முருகன், ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஊழியர்கள் இந்த அபராதம் வசூலிக்கும் பணியை மேற்கொண்டனர். அவர்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசாரும் இருந்தனர்.
அதிகாரிகள் மற்றும் போலீசார் அபராதம் விதிப்பதை பார்த்த முக கவசம் அணியாத வாகன ஓட்டிகள் பலர் தங்களது வாகனத்தை திருப்பி கொண்டு வேறு வழியாகவும், சிலர் வந்த வழியாகவும் தப்பி ஓடினர். முக கவசம் அணியாமல் வந்த 26-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
ரூ.1.35 லட்சம் அபராதம் வசூல்
தஞ்சை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து அபராதம் வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முதல் நான்காவது கட்டமாக அபராதம் வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story