புதையல் எடுத்து தருவதாக மோசடி செய்த ஜோதிடரின் கூட்டாளிகள் 5 பேருக்கு வலைவீச்சு


புதையல் எடுத்து தருவதாக மோசடி செய்த ஜோதிடரின் கூட்டாளிகள் 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 April 2021 10:00 PM IST (Updated: 14 April 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் புதையல் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் ஜோதிடரின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்:
விவசாயியிடம் புதையல் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் ஜோதிடரின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
புதையல் மோசடி 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அரியபித்தன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவருக்கு ஓராண்டுக்கு முன்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஜாதகம் பார்ப்பதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை தாலுகா மடத்துக்குளம் அருகே உள்ள கனியூரை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் (வயது 51) என்பவரை சந்தித்தார். இதையடுத்து தங்கவேலின் வீட்டுக்கு, சிலருடன் வந்து ஜோதிடர்        சசிகுமார் பரிகார பூஜை செய்தார்.
மேலும் தங்கவேலின் தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் சசிகுமார் கூறினார். இதற்காக தங்கவேல் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.22 லட்சம், 44 பவுன் நகைகள், கார், மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை சசிகுமார் வாங்கினார். ஆனால், புதையல் எடுத்து கொடுக்காமல் ஏமாற்றினார். இதுபற்றி தங்கவேல் கேட்ட போது மறுநாளே பூஜை செய்து புதையல் எடுத்து தருவதாக சசிகுமார் கூறினார்.
அதன்படி மறுநாள் சசிகுமார் 5 பேருடன் தங்கவேல் வீட்டுக்கு வந்தார். ஆனால், புதையல் எடுத்து கொடுக்காமல் தங்கவேல் குடும்பத்தினரை மிரட்டி விட்டு சென்று விட்டார். இதையடுத்து தங்கவேல் உறவினர்களுடன் சென்று கேட்டபோது கார், மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், ரூ.20 லட்சம் மற்றும் 44 பவுன் நகைகளை கொடுக்கவில்லை.
மேலும் 5 பேருக்கு வலைவீச்சு 
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர் சசிகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தங்கவேல்   வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுத்த ஜோதிடரின் கூட்டாளிகள் 5 பேரை கைது செய்வதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தனிப்படையினர் அந்த 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story