விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம்


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 14 April 2021 10:40 PM IST (Updated: 14 April 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம், 


தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

அதன்படி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று,  தங்க கவச அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 உற்சவ அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

விழுப்புரம்

இதேபோல் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தரிசனத்துக்கு வந்த பக்தர்களில் முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதுபோல் ஆஞ்சநேயர் கோவிலின் பின்புறமுள்ள குளக்கரையில் கோவில் கொண்டுள்ள 90 அடி உயரவிஸ்வரூப ஆஞ்சநேயருக்கு எளிமையான முறையில்  பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
 
இதபோல், விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழி மாரியம்மன் கோவில்,  காமராஜர் வீதியில் உள்ள அமராபதி விநாயகர், விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில், திரு.வி.க. வீதியில் உள்ள கைலாசநாதர், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிவாலீஸ்வரர், விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள சித்தி விநாயகர், பூந்தோட்டம் முத்துமாரியம்மன், ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் உள்ள பாலமுருகன், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரடி விநாயகர், எடத்தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் பூஜைகள் செய்யப்பட்டன.

செஞ்சி

இதேபோல் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன், அகத்தீஸ்வரர், ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர், மேலச்சேரி மத்தளேஸ்வரர், பெருவளூர் ஸ்ரீகோட்டீஸ்வரர், தேவனூர் திருநாதீஸ்வரமுடைய நாயனார் ஆகிய கோவில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலைமீது உள்ள ரங்கநாதர் கோவிலிலும் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்த சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் செஞ்சிக் கோட்டை வெங்கட்ரமணர் கோவில், செல்லப்பிராட்டியிலுள்ள லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவில், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவில், கிருஷ்ணாபுரம் சுப்ரமணிய சாமி கோவிலிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

மேலும் செஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர், அருணாசலேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story