கரூரில் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள்


கரூரில் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 April 2021 5:11 PM GMT (Updated: 14 April 2021 5:11 PM GMT)

கரூரில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரூர், 

நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரூர் நகராட்சி சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நகராட்சிக்கு உட்பட்ட 4 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆர்வத்துடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டினர்.

நாள் ஒன்றுக்கு 300 பேர் வரை...

இதுகுறித்து கரூர் நகராட்சி நகர்நல அலுவலர் யோகானந்த் கூறுகையில், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி, இனாம் கரூர், பசுபதிபாளையம், தாந்தோணிமலை ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 200 பேர் முதல் 300 பேர் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) விடுமுறை நாள் என்பதால் சற்று கூடுதலாக பொதுமக்கள் வருகை புரிந்துள்ளனர்.

2,000 பேருக்கு இலக்கு

கடந்த 3 நாட்களாக 1,449 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 1,254 நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 195 நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது தினமும் 600 முதல் 700 நபர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். நகராட்சி சார்பாக நாள் ஒன்றுக்கு 2,000 நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு வைத்து இருக்கிறோம். மேலும், 4 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் போதுமான அளவு தடுப்பூசிகள் அனுப்பி வைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

Next Story