விழுப்புரத்தில் போலீஸ்காரர் மனைவியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
விழுப்புரத்தில் போலீஸ்காரர் மனைவியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவியரசி (வயது 31). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது கவியரசி, கர்ப்பிணியாக உள்ளார்.
இவர் கடந்த 8-ந் தேதி காலை செஞ்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல வீட்டை பூட்டிவிட்டு மனைவி கவியரசி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
கண்டியமடை கிராம சாலை அருகே சென்றபோது கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ அட்டையை கவியரசி, வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததால் கவியரசியையும், குழந்தையையும் அங்குள்ள ஒரு மரத்தின் நிழலில் நிற்க வைத்துவிட்டு மருத்துவ அட்டையை எடுத்து வருவதற்காக முத்துக்குமரன் மட்டும் வீட்டிற்கு சென்றார்.
அந்த சமயத்தில் கண்டியமடை கிராம சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், திடீரென கவியரசியை இரும்புக்கம்பியால் தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
எலும்பு முறிவு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் வி.பாளையம் பிரிவு சாலை அருகில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமடக்கினர். போலீசாரை பார்த்ததும் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் திரும்பிச்செல்ல முயன்றபோது தவறுதலாக கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனே அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டு காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் அறிவழகன் (வயது 39) என்பதும், போலீஸ்காரர் முத்துக்குமரனின் மனைவி கவியரசியை தாக்கி நகையை பறித்ததும் தெரியவந்தது.
நகை பறிமுதல்
இதையடுத்து அறிவழகனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த நகை மற்றும் இரும்புக்கம்பிகள் ஆகியவற்றையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அறிவழகனை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். கைதான அறிவழகன் மீது ஏற்கனவே திருவெண்ணெய்நல்லூர், நெல்லிக்குப்பம் ஆகிய போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story