திருச்சியில் இருந்து அன்னவாசல் சென்ற தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் திடீர் சாவு
திருச்சியில் இருந்து அன்னவாசல் சென்ற தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் திடீரென உயிரிழந்ததால் அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
மணிகண்டம்,
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலுக்கு ஒரு தனியார் பஸ் நேற்று காலை 9 மணி அளவில் புறப்பட்டது. விராலிமலை வழியாக செல்லும் அந்த பஸ்சை இலுப்பூர் அருகே பூனைக்குத்திபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் ஆனந்த் (வயது 27) ஓட்டிச்சென்றார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர்.
திருச்சி-மதுரை சாலையில் 9.30 மணியளவில் பாத்திமாநகரை அடுத்த எரங்குடி பிரிவு ரோடு அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் ஆனந்த் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கண்டக்டரிடம் கூறியவாறு பஸ் ஸ்டீயரிங்கில் மயங்கி விழுந்தார்.
கட்டுப்பாட்ைட இழந்த பஸ்
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் ஏறி சாலையின் மறுபக்கம் சென்று சாலையோர காட்டுப்பகுதியில் இறங்கி வேகமாக சென்றது.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் பிழைப்பதற்காக ஐயோ, அம்மா என்று அலறினர். பின்னர் பஸ் சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த கருவேல மரத்தில் மோதி நின்றது.
சாவு
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த விபத்தை அவ்வழியே சென்றவர்கள் நேரில் பார்த்து பதறினர். பின்னர், ஓடிச்சென்று பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் டிரைவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று பஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story