போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்ட 4 கன்டெய்னர் லாரிகள் விழுப்புரத்தில் பரபரப்பு


போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்ட 4 கன்டெய்னர் லாரிகள் விழுப்புரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2021 10:49 PM IST (Updated: 14 April 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் விடிய, விடிய 4 கன்டெய்னர் லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியில் இருந்து விடிய, விடிய வெளிமாநில பதிவெண் கொண்ட 4 கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த கன்டெய்னர் லாரிகளுக்கு  10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவவே தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கும் அரசியல் கட்சியினர் பலரும் பெரும் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, இந்த 4 கன்டெய்னர் லாரிகளிலும் பழைய செல்லாத நாணயங்கள் இருப்பதாகவும், இவற்றை உருக்கி புதிய நாணயங்களின் பயன்பாட்டுக்காக கொல்கத்தாவில் இருந்து கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சேலத்தில் உள்ள உருக்காலைக்கு கொண்டு செல்ல இருந்ததும், இரவு நேரங்களில் பயணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு இருப்பதால் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட வேண்டும்.


போலீஸ் பாதுகாப்புடன்

அதன்படி இந்த 4 கன்டெய்னர் லாரிகளும் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு விழுப்புரம் நகர எல்லைக்குள் வந்ததும் அதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணியளவில் அந்த 4 கன்டெய்னர் லாரிகளும் விழுப்புரத்தில் இருந்து சேலத்திற்கு புறப்பட்டுச்சென்றன. 4 கன்டெய்னர் லாரிகள் விடிய, விடிய போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story