தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


தமிழ் புத்தாண்டையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 April 2021 10:51 PM IST (Updated: 14 April 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி சங்கராபுரம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சங்கராபுரம்

அபிஷேகம்

தமிழ் புத்தாண்டையொட்டி சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சக்தி    விநாயகர்  சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்க மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சங்கராபுரம் மணி நதிக்கரை அருகே உள்ள வெங்கடேசபெருமாள், வாசவாம்பாள் கோவில், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர், ராமபக்த ஆஞ்சநேயர், தேவபாண்டலம் பாலாம்பிகா சமேத பாண்டுவனேஸ்வரர், மாநாட்டு மாரியம்மன், பெரியநாயகி அம்மன், வீரஆஞ்சநேயர், மணி தீர்த்த ஆஞ்சநேயர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், மூக்கனூர் தாண்டுவனேஸ்ரர், பாக்கம் சோளீஸ்வரர், ராவத்தநல்லூர் வியாக்ரபுரீஸ்வரர், சக்தி மலை முருகன், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகப்பெருமான், வீர ஆஞ்சநேயர், பூட்டை மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெண்ணை காப்பு, துளசி மாலை அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மூங்கில்துறைப்பட்டு பாலமுருகன், சிவன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பரிக்கல் லட்சுமி நரசிம்மர்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் அருள்பாலித்தார். அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் நரசிம்மா, நரசிம்மா என கோஷம் எழுப்பினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.  முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்களை கோவில் ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து வந்த பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். வழக்கமாக நடைபெறும் அர்ச்சனைகள் ரத்து செய்யப்பட்டு பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப் பட்டது.

Next Story