விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 76,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி


விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 76,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 14 April 2021 5:24 PM GMT (Updated: 14 April 2021 5:24 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 76,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.

விழுப்புரம், 


இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளை பொதுமக்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. இதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடந்தது. 

இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியான கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கடந்த 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுத்தார். இதன்படி மத்திய அரசு சார்பில் தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி போட வைப்பதே இந்த தடுப்பூசி திருவிழாவின் நோக்கமாகும்.

 67 இடங்களில் தடுப்பூசி திருவிழா 

அதன்படி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை 4 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு தடுப்பூசி திருவிழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் மத்திய அரசின் தடுப்பூசி திருவிழா நிறைவுபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழாவை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன் அடிப்படையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி சிறப்பு முகாம்கள் அமைத்து ஒவ்வொரு இடங்களிலும் நடைபெறும் முகாமில் 2 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு பொதுமக்களிடம் கொரோனா நோயின் தாக்கம், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

76,663 பேருக்கு

அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கோவிஷீல்டு என்ற தடுப்பூசி 71,874 பேருக்கும், கோவேக்சின் என்ற தடுப்பூசி 4,789 பேருக்கும் ஆக மொத்தம் 76,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story