பேராசிரியர் வீட்டில் ரூ9 லட்சம் நகை கொள்ளை
கோவை வடவள்ளியில் பேராசிரியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வடவள்ளி
கோவை வடவள்ளியில் பேராசிரியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி பேராசிரியர்
கோவையை அடுத்த வடவள்ளி-சிறுவாணி சாலையில் உள்ள மகாராணி அவென்யூ சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45).
இவர் கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவசாய கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லுக்கு சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பினார். அப்போது அவர் வீட்டின் முன்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது வீட்டின் ஓரத்தில் இருந்த போர்ட்டிகோ ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.9 லட்சம் நகை கொள்ளை
வீட்டிற்குள் பார்த்தபோது அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது.
அதில் இருந்த 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசலு தலைமையில் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் மோப்பநாய், கைவிரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் போலீசார் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story