தமிழ்ப் புத்தாண்டையொட்டி விவசாயிகள் நல் ஏர் பூட்டி நிலங்களை உழுதனர் பூமாதேவிக்கு காப்பரிசி படையலும் ஈட்டனர்


தமிழ்ப் புத்தாண்டையொட்டி  விவசாயிகள் நல் ஏர் பூட்டி நிலங்களை உழுதனர்  பூமாதேவிக்கு காப்பரிசி படையலும் ஈட்டனர்
x
தினத்தந்தி 15 April 2021 12:01 AM IST (Updated: 15 April 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நல் ஏர் பூட்டி விவசாயிகள் நிலங்களை உழுதனர். பூமாதேவிக்கு காப்பரிசி படையலும் நடந்தது.

கறம்பக்குடி:
தமிழ்ப் புத்தாண்டு 
வசந்த காலத்தின் தொடக்கமான சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிராம பகுதிகளில் நல்லேறுபூட்டி விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம். புதிதாக பிறந்திருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் விவசாயம் தழைக்க வேண்டும். 
ஆடு, மாடுகளுக்கு தீவனம் கிடைக்க வேண்டும். உணவு பொருள் உற்பத்தி அதிகரித்து பசி, பட்டினி இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பருவமழை எப்போது பெய்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் சித்திரை 1-ந்தேதி விவசாயிகள் ஏர் பூட்டி விவசாய வேலைகளை தொடங்குவது நடைமுறையாக உள்ளது.
நல்லேர் பூட்டும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் நேற்று நல்லேறு பூட்டும் விழா அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் விவசாயிகள் ஏர் பூட்டி நிலங்களை உழுதனர். பெரும்பாலும் தற்போது உழவு பணிக்கு டிராக்டர்களே பயன்படுத்தபடுகிறது. இருப்பினும் கலாசாரம் மற்றும் பழமை மாறாமல் பெரும்பாலான விவசாயிகள் வீட்டில் உள்ள காளை மாடுகளை ஏறு பூட்டியே உழவு பணிகளை தொடங்கினர். 
பின்னர் டிராக்டர்கள் முலம் உழவு பணி தொடர்ந்தது. கறம்பக்குடி, பிலாவிடுதி, பட்டாமா விடுதி, ரெகுநாதபுரம், மழையூர், புதுப்பட்டி, வெட்டன் விடுதி, மஞ்சுவிடுதி, உள்ளிட்ட பல பகுதிகளில் நல்லேறு பூட்டும் விழா நடந்தது.
பூமாதேவிவை வழிபட்டனர்
முன்னதாக நிலங்களில் ஏர்கலப்பை, நிறைகுடம் போன்றவற்றை வைத்து காப்பரசி படையல் செய்து பெண்கள் மற்றும் விவசாயிகள் பூமாதேவியை வழிபட்டனர். மேலும் மாட்டு தொழுவத்தில் பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு வழங்கப்பட்டது. 
இதுகுறித்து பிலாவிடுதிபட்ட மாவிடுதியைச் சேர்ந்த விவசாயி கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்புவரை ஊர்கூடி இந்த நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெறும். காலமாற்றத்தினாலும், விவசாயத்தில் பல நவீன கருவிகள் பயன்படுத்தபடுவதாலும் தற்போது விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்லேறு பூட்டும் நிகழ்வை நடத்துகின்றனர். ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமைந்துவிட்டால் வருடம் முழுவதும் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு விவசாயிகளின் நம்பிக்கை வீண்போகாது என கூறினார்.
அறந்தாங்கி
அறந்தாங்கி பகுதியில் உள்ள விவசாயிகள் சித்திரை முதல் நாளான நேற்று விவசாய நிலங்களில் நல்லேர் பூட்டி இறைவழிபாடு நடத்தி விவசாய பணிகளை தொடங்கினர்.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களான கருப்புடையான்பட்டி, கணபதிபுரம், ஆதனக்கோட்டை, மணவாத்திப்பட்டி, பெருங்களூர், சோத்துப்பாழை, கல்லுக்காரன்பட்டி, வண்ணாரப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் டிராக்டர் மூலம் நல் ஏர் பூட்டி சாமி கும்பிட்டு உழுதனர்.
வடகாடு
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் புதிதாக வாங்கிய காளைகளை ஏர் கலப்பையில் பூட்டும் முன்பு பூமி தாய்க்கு பூஜை செய்து நல்லேர் பூட்டிய நிகழ்வு நடந்தது. இதில் அருகருகே உள்ள விவசாயிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் இளைய தலைமுறைக்கும் புரிய வேண்டும் என தங்களது குழந்தைக்கும் ஏர் கலப்பை பூட்டி கற்று கொடுத்து வருகின்றனர். ஏர் கலப்பை இல்லாத விவசாயிகள் டிராக்டர் மூலமாக நல்லேர் பூட்டி மகிழ்ந்தனர்.
கீரமங்கலம்
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்பட பல கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் சித்திரை முதல் நாளில் தங்கள் வயல்களில் பூ, பழம், விதைகள் வைத்து படையலிட்டு விளை நிலத்திற்கும் ஏர் இழுக்கும் காளைகளுக்கும் தீபம் காட்டிய முதல் ஏர் பூட்டி உழுதனர். இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களையும் ஏர் உழுக பழக்கினார்கள்.

Next Story