ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதம்
திருவாரூரில் பெய்த திடீர் மழையால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. இதனால் நெல்மூட்டைகளை விரைவில் எடுத்து செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்;
திருவாரூரில் பெய்த திடீர் மழையால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. இதனால் நெல்மூட்டைகளை விரைவில் எடுத்து செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூரில் திடீர் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும் என தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவாரூர் பகுதியில் காலை 11 மணியளவில் வானில் கருமே கூட்டம் சூழ்ந்து மழை வருவதற்கான இருண்ட சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது.
திருவாரூர், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், மணக்கால் பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மணக்கால், அய்யம்பேட்டை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தன.
தேங்கி கிடக்கிறது
இதைப்போல அந்த பகுதியில் பெய்த மழைநீர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குள் புகுந்து நெல் மூட்டைகளை சூழ்ந்து நின்றதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து உள்ளனர்.
குறிப்பாக ஜனவரி மாதம் முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக லாரியில் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்படாமல் மாவட்டத்தின் பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மலைபோல நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது.
எனவே உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை லாரி மூலம் எடுத்து செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story