நெல்லை கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதி
நெல்லை கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி வழிபாடுகள் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி வழிபாடுகள் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ் புத்தாண்டு
சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது. கொரோனா பரவலை தடுப்பதற்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமி நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
சாலை குமாரசாமி
இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில், முத்தாரம்மன் கோவில், வெற்றி விநாயகர் கோவில் உள்பட பல கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.
சுடலைமாட சுவாமி கோவில்
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு சுடலைமாட சுவாமி, பேச்சி, பிரம்மசக்தி, முண்டசுவாமி, புதியவன் சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும் நடந்தது. பின்னர் ஆடுகள் பலியிடப்பட்டது. இந்த பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story