தஞ்சை பகுதியில் விளைச்சல் பாதிப்பால் வெற்றிலை தட்டுப்பாடு விலையும் கடுமையாக உயர்ந்தது


தஞ்சை பகுதியில் விளைச்சல் பாதிப்பால் வெற்றிலை தட்டுப்பாடு விலையும் கடுமையாக உயர்ந்தது
x
தினத்தந்தி 15 April 2021 1:07 AM IST (Updated: 15 April 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

விளைச்சல் பாதிப்பால் தஞ்சை பகுதியில் வெற்றிலை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர்:-

விளைச்சல் பாதிப்பால் தஞ்சை பகுதியில் வெற்றிலை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

வெற்றிலை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, அந்தளி, கும்பகோணம், வளப்பகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
எந்த சுபநிகழ்ச்சி ஆக இருந்தாலும் அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது வெற்றிலை ஆகும். திருமணம், கோவில் விழாக்களில் கருப்பு வெற்றிலை பயன்படுத்துவர். பீடாவுக்கு வெள்ளை வெற்றிலை பயன்படுகிறது. பனிக்காலத்தில் வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டும் பருவம் தவறி பெய்த மழையால், வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டது. விளைச்சலும் குறைந்தது.

விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு

மேலும் தற்போது கோடை வெயில் காரணமாகவும் வெற்றிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவைக்கு குறைவாகவே வெற்றிலை வரத்து இருப்பதால், விலையும் ஏறுமுகமாகவே உள்ளது.
தஞ்சை மாநகருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 30 முதல் 50 கட்டுகள் (முட்டி) வெற்றிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஒரு முட்டியில் சிறிய கட்டுகளாக 25 கட்டுகள் வெற்றிலை இருக்கும். ஒரு கட்டில் குறைந்தது 100 வரை வெற்றிலை இருக்கும்.
தற்போது விளைச்சல் குறைவாக இருப்பதால் வெற்றிலை வரத்து குறைந்துள்ளது. இதனால் வெற்றிலையின் விலை அதிகரித்து காணப்படுகிறது. 

விலை நிலவரம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறியரக வெற்றிலை கொண்ட ஒரு முட்டி ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டி தற்போது ரூ.900 விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய ரக வெற்றிலை கொண்ட முட்டி ரூ.1,300 முதல் ரூ.1,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் உயர வாய்ப்பு

இது குறித்து தஞ்சை மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் மொத்த வியாபாரி மதி கூறுகையில். ‘வெற்றிலை விளைச்சல் குறைந்துள்ளதால் தற்போது விலை அதிகரித்து காணப்படுகிறது. தேவைக்கு ஏற்ப வெற்றிலை சப்ளை செய்யப்படுவதில்லை. இதனால் வெற்றிலை பயன்படுத்துவோரும் குறைந்த அளவிலேயே வாங்கி செல்கிறார்கள். தொடர்ந்து இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது இவற்றின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது’ என்றார்.

Next Story