பாரம்பரியத்தை போற்றும் வகையில் "ஏர்பூட்டி உழும் விழா"
திருப்பரங்குன்றத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியம் போற்றும் வகையில் கோவில் நிலத்தில் ஏர்பூட்டி உழும் விழா நடைபெற்றது
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியம் போற்றும் வகையில் கோவில் நிலத்தில் ஏர்பூட்டி உழும் விழா நடைபெற்றது.
விவசாய கருவிகள்
நம் நாட்டின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. முன்னோர் காலத்தில் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஏர் கலப்பைகள், தார் குச்சிகள், உழவு மாடுகளை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர். ஆனால் கம்ப்யூட்டர் யுகமான தற்போது விவசாயிகளின் வீடுகளில் ஏர் கலப்பைகள், |உழவு மாடுகள் இருப்பது அரிதாக மாறியுள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வயல்களில் உழுதல் முதல் அறுவடை வரை நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே, எதிர்காலத்தில் ஏர் கலப்பை உழவு மாடுகள், தார் குச்சி, மண்வெட்டி போன்ற பழமையான விவசாய கருவிகள் காணக்கிடைக்காத அபூர்வ பொருளாக உருமாறி கண்காட்சியில் இடம்பெறும் நிலை உருவாகிவிடும் நிலை இருந்து வருகிறது.
பராம்பரியம் போற்றுதல்
இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் விவசாயிகள் பழமை மாறாமல் பாரம்பரியத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ஏர் உழுதல் நிகழ்ச்சியைதொன்றுதொட்டு நடத்தி வருகின்றனர். அதன்படி தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ஏர் பூட்டி உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றத்தில் சுற்றியுள்ள 7 கண்மாய்களின் விவசாயிகள் கோவில் வாசல் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் புதிய தார்குச்சிகளை வாங்கினர். பிறகு கோவிலுக்குள் தயாராக இருந்த தச்சு தொழிலாளிகள் மூலம் தார்குச்சிகளுக்கு ஆணி அறைந்து அதில் பூச்சூடியபடி கிரிவலம் வந்தனர். இதற்கிடையில் கிரிவலப்பாதையில் உள்ள கோவில் நிலத்தில் பாரம்பரியத்தை போற்றும் வகையில் 4 ஏர் கலப்பையில் மாடுகள் பூட்டி வயலை விவசாயிகள் உழுதனர்.
இதனையடுத்து மலைக்கு பின்புறம் உள்ள கல்வெட்டு குகை கோவில் வளாகத்தில் நாட்டாண்மை, காவல், வைராவி மிராசு மற்றும் 7 கண்மாய்களின் விவசாயிகள் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் நடப்பு ஆண்டில் விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப தச்சு தொழிலாளி, மூடி திருத்தும் தொழிலாளி, சலவை தொழிலாளி உள்ளிட்ட விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கூலி நிர்ணயம் குறித்து பேசினார்கள்.
இதனை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்து மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று முருகப்பெருமானை வழிபட்டனர்.
Related Tags :
Next Story