தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 15 April 2021 1:47 AM IST (Updated: 15 April 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
சித்திரை முதல்நாள்
தமிழ் புத்தாண்டான சித்திரை முதல்நாளையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வழக்கத்தைவிட கோவில்களில் கூட்டம் குறைந்திருந்தது. எனினும் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்றன. 
பண்ணாரி
தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு பண்ணாரி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வரிசையில் வந்து நின்றிருந்தார்கள். அம்மனை தரிசனம் செய்த பின்னர் குண்டம் அமைக்கப்படும் இடத்துக்கு வந்து வணங்கி அங்கிருந்த மண்ணை எடுத்து நெற்றியில் திருநீறாக பூசிக்கொண்டார்கள். 
கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இடைவெளிவிட்டு சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகிகள் அறிவுறுத்தினார்கள். அதன்படி முககவசம் அணிந்து, இடைவெளியுடன் சென்று பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தார்கள். 
கனி அலங்காரத்தில் அய்யப்பன்
தமிழ் புத்தாண்டையொட்டி கோபி அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணி முதல் கனி அலங்காரத்தில் அய்யப்பன் காட்சி தந்தார். 
இதேபோல் வேலுமணி நகர் சக்தி விநாயகர், சாரதா மாரியம்மன், ஆஞ்சநேயர், பச்சைமலை முருகன், பவள மலை முருகன்,  பாரியூர் கொண்டத்து காளியம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
ஈஸ்வரன் கோவில்
கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக நந்தீஸ்வரர், விசாலாட்சி, விஸ்வேஸ்வரருக்கு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோபி மாதேஸ்வரர் கோவிலிலும் சித்திரை திருநாள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. 
கோவிலில் உள்ள விநாயகர், நந்தீஸ்வரர், மரகதவல்லி, காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு இருந்தது. 
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் காவிரி கரையில் அமைந்துள்ள ராகு-கேது பரிகார தலமான நாகேஸ்வரர் கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஊஞ்சலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்கள். 
இதேபோல் தெற்கு தெரு விநாயகர் கோவிலில் அய்யப்பன் உற்சவ சிலைக்கு பால், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருநீறு, நெய் அபிஷேகம் நடைபெற்றது. 
கொளாநல்லியில் உள்ள பழமையான பாம்பலங்கார சாமி கோவிலிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. 
சென்னிமலை
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் அடிவாரத்திலுள்ள நுழைவு வாயில் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் காலை 5.15 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை முருகப்பெருமானுக்கு வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் நடைபெற்றது.
 பின்னர் முருகப்பெருமானுக்கு பழ வகைகள் வைத்து பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அனைவருக்கும் கிருமி நாசினி வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேங்காய், பழம், பூ மாலை போன்ற பூஜை பொருட்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பஞ்சாங்கம்
கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.
சென்னிமலை கோவில் செயல் அலுவலர் எம்.அருள்குமார் உத்தரவின் பேரில் கோவில் பணியாளர்கள்  பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். சென்னிமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் தலைமை குருக்கள் ரமேஷ் தலைமையில் உலக நன்மைக்காக பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் பிரசித்தி பெற்ற பேட்டை பெருமாள் கோவில் உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர் சாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வகை கனிகள் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளித்தார். சமூக இடைவெளி விட்டு முககவசங்கள் அணிந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சிவகிரி
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிவகிரி வேலாயுதசாமி, எல்லை மாகாளியம்மன், காமாட்சி அம்மன், வேட்டுவபாளையம் புத்தூர் அம்மன், அம்மன் கோவில் கிராமத்தில் உள்ள பொன்காளி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு சென்று தரிசனம் செய்தார்கள். 
வழக்கமாக தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் அன்னதானம் நடைபெறும். கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அன்னதானம் நடைபெறவில்லை. 
பவானி
 சித்திரை திருநாளை முன்னிட்டு புகழ்பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அதிகாலையே நடை திறக்கப்படடது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் முக்கனிகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முககவசம் அணிந்துகொண்டு பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தார்கள். காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் வருகை குறைந்தது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்ததாக கூறப்படுகிறது.
கொடுமுடி 
கொடுமுடி மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருநாளன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் குடும்பம், குடும்பமாக வந்து காவிரியில் புனிதநீராடி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு, கோரோனா நோய் பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்களே கோவிலுக்கு வந்திருந்தார்கள். காவிரி ஆற்று படித்துறையும் வெறிச்சோடி காணப்பட்டது. 
எனினும் வழக்கம்போல் மகுடேசுவரர், வீரநாராயணபெருமாள், பிரம்மா, வடிவுடை நாயகி மற்றும் தனி சன்னதி கொண்டுள்ள அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
கொடுமுடி ஏமகண்டனூர் ஆட்சி அம்மன் கோவிலிலும் சித்திரை திருநாளை முன்னிட்டு ஆட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சமூக இடைவெளிவிட்டு பக்தர்கள் வரிசையில் வந்து அம்மனை தரிசனம் செய்தார்கள். 
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழூர் தாட்சாயணி அம்மன் உடனமர் தம்பிரானீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று திருவிழா நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதனால் குறைந்த பக்தர்களே முககவசம் அணிந்துகொண்டு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்கள். 
அம்மாபேட்டை
அம்மாபேட்டை காவிரிக்கரையில் அமைந்துள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கொேரானா தொற்று பரவலை தொடர்ந்து பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று முககவசத்துடன் சாமி தரிசனம் செய்தார்கள். இதேபோல் அம்மாபேட்டை கரியகாளியம்மன், ஓம்காளியம்மன் பழைய மாரியம்மன் கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
-------

Next Story