கொரோனா அச்சுறுத்தலையும் மீறி கோவில்களில் பக்தர்கள் தமிழ்ப்புத்தாண்டு தரிசனம்


கொரோனா அச்சுறுத்தலையும் மீறி கோவில்களில் பக்தர்கள் தமிழ்ப்புத்தாண்டு தரிசனம்
x
தினத்தந்தி 15 April 2021 2:42 AM IST (Updated: 15 April 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தலையும் மீறி திருச்சி கோவில்களில் பக்தர்கள் புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி, 
கொரோனா அச்சுறுத்தலையும் மீறி திருச்சி கோவில்களில் பக்தர்கள் புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்ப்புத்தாண்டு தரிசனம்

பொதுவாக தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்து கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், அர்ச்சனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி திருச்சியில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததை காண முடிந்தது.

வெக்காளி அம்மன் கோவில்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

பக்தர்கள் கோவிலுக்குள் வரும்போது அவர்களின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோவில் உள் பிரகாரத்தில் தங்க ரதமும் வலம் வந்தது.

மலைக்கோட்டை

இதேபோல மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உள்ள மாணிக்க விநாயகர் சன்னதி, உச்சிப்பிள்ளையார் சன்னதிகளிலும் நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தரிசனம் செய்தனர். 

இதுபோல் தமிழ்ப்புத்தாண்டையொட்டி வயலூர் முருகன் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.  திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவிலில் முருகன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. 

அனுமதி இல்லை

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடப்பிறப்பன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் கோவில் வாசல் அருகில் நின்று கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு புறப்பட்டனர்.

முசிறி, தா.பேட்டை

இதுபோல் முசிறி, தா.பேட்டை பகுதி கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முசிறியில் சந்திரமவுலீஸ்வரர், அண்ணாமலையார், அழகுநாச்சியம்மன், மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், கருமாரியம்மன், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பழங்கள் வைத்து வழிபட்டனர்.
இதேபோன்று தா.பேட்டையில் காசிவிசுவநாதர், மாரியம்மன், செல்லாண்டிஅம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசுவாமி, ராஜகாளியம்மன், ஷண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

உப்பிலியபுரம்

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஓசரப்பள்ளி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் பெருந்திரளான மக்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

முன்னதாக, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரசித்தி பெற்ற இவ்வூரில், பசுக்களும், ஜல்லிக்கட்டு காளைகளும் அலங்கரிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் பூஜை நடத்தப்பட்டது. பூஜையில் பொதுமக்களும், பக்தர்களும் திரளாக வந்திருந்து கலந்து கொண்டனர்.

Next Story