தமிழ்ப்புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சேலம், ஏப்.15-
சேலத்தில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராஜகணபதி கோவில்
சித்திரை முதல் நாளான தமிழ்ப்புத்தாண்டு நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
சேலம் டவுனில் உள்ள ராஜகணபதி கோவிலில் காலையில் சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தங்க கவசத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் காசி விஸ்வநாதர் கோவிலில் சாமிக்கு விஷூ கனி அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோட்டை மாரியம்மன் கோவில்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
குமாரசாமிபட்டியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு முத்தங்கி மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.
சேலம் கோட்டை அழகிரிநாதசாமி கோவிலில் பெருமாள், சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அஸ்தம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்
அம்மாபேட்டை வரதராஜபெருமாள் கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பேர்லேண்ட்ஸ் வேங்கடாஜலபதி கோவில், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் மற்றும் பல்வேறு கோவில்களிலும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கொண்டு கோவில்களுக்கு வந்து சாமியை வழிபட்டனர்.
Related Tags :
Next Story