தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு - தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பக்தர்கள் வாக்குவாதம்


தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு - தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பக்தர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 15 April 2021 7:41 AM IST (Updated: 15 April 2021 7:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் தரிசனத்துக்கு அனுமதிக்காததால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ் புத்தாண்டையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அனைத்து கோவில்களும் மூடப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு முத்தங்கி அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. 
நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில், கோட்டை மல்லிகார்ஜூன சாமி கோவில், பரவாசுதேவ சாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், எஸ்.வி. ரோடு அபய ஆஞ்சநேயர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று பெண்கள் கூழ் ஊற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கூழ் ஊற்றி வழிபட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் பெண்கள் வீட்டில் இருந்து கூழ் பானைகளை கொண்டு வந்து கோவிலுக்கு வெளியே வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு நடைபெற்ற வழிபாட்டில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பெண்கள் கோவிலுக்கு வெளியே இருந்தபடி அம்மனை தரிசித்து விட்டு சென்றனர்.

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்காததை கண்டித்து இந்து முன்னணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அனைத்து கோவில்களிலும் நடை திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

இதேபோன்று மாவட்டம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story