திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தந்தை, மகன் பலி - உறவினர்கள் சாலை மறியல்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தந்தை, மகன் பலியானார்கள். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேசன் (வயது 70). இவரது மகன் லோகநாதன் (40). இவர் அரசு பஸ் கண்டக்டர்.
நேற்று முன்தினம் இரவு இவரது தந்தை தேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து லோகநாதன் தேசனை சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார். சிகிச்சை முடிந்து அவர்கள் இருவரும் வீடு திரும்பி் கொண்டிருந்தனர்.
முருக்கம்பட்டு கிராமம் அருகே வரும்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் லோகநாதன், தேசன் இருவரும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தனர்.
காரில் வந்தவர்கள் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருத்தணி போலீசார் விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி மண்டலம் நின்ற ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சின்னகுட்டி (30) என்பவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story