தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2021 10:07 AM IST (Updated: 15 April 2021 10:07 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர், வதட்டூர், ஆர்.ஆர்.கண்டிகை, திருகணஞ்சேரி, விளாபாக்கம், கரிக்கலவாக்கம், மேல்செம்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

இது குறித்து வெள்ளியூர் மற்றும் கீழானூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு இந்த கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை கீழானூர் கிராமத்தில் உள்ள மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

தகவலறிந்து வந்த வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.

சம்பவ இடத்துக்கு வெள்ளியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் கீழானூருக்கு வரும் மின்வினியோகம் அடிக்கடி தடைபடுகிறது. எனவே, இன்னும் சில நாட்களில் திருவள்ளூரில் உள்ள டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டவுடன் சீரான மின்வினியோகம் தொடங்கும் என்று உறுதி கூறினார்.

இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story