ரூ.100 கோடி மாமூல் புகார்; முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிடம் சி.பி.ஐ. விசாரணை
ரூ.100 கோடி மாமூல் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்திய மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிடம் நேற்று 8 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
பதவி ராஜினாமா
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிப்பொருட்களுடன் கார் சிக்கிய வழக்கு மராட்டிய அரசியலை புரட்டி போட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு போலீசாரை கட்டாயப்படுத்தியதாக இடமாற்றம் செய்யப்பட்ட பரம்பீர் சிங் கூறியிருந்தார். இதேபோல வெடிகுண்டு கார் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவும் அனில் தேஷ்முக் மீது முறைகேடு புகார்களை கூறியிருந்தார்.
இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டு அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டதை அடுத்து, அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
தீவிர விசாரணைஇதைதொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீதான முறைகேடு புகார் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே, துணை போலீஸ் கமிஷனர் ராஜூ புஜ்பால், உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாட்டீல், வக்கீல் ஜெயஸ்ரீ பாட்டீல் மற்றும் ஓட்டல் உரிமையாளர் மகேஷ் ஷெட்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனில் தேஷ்முக்கின் நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே, நேர்முக செயலாளர் சஞ்சீவ் பாலன்டே ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தனர்.
நேரில் ஆஜர்இந்தநிலையில் விசாணைக்காக நேரில் ஆஜராகுமாறு முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் நேற்று காலை 10 மணி அளவில் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான சி.பி.ஐ. அதிகாரி தலைமையில் விசாரணை நடந்தது. 8 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.
இதையடுத்து இன்று(வியாழக்கிழமை) மீண்டும் அவர் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. உத்தரவிட்டு உள்ளது.