திருவண்ணாமலை; நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
மல்லவாடி ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
மல்லவாடி ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டம்
திருவண்ணாமலை வேங்கிக்காலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.
இந்தநிலையில் இந்த ஆண்டு இது நாள் வரையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கவில்லை. இதனால் சுற்றி உள்ள பல கிராமங்களில் நெல் அறுவடை செய்யப்பட்டும், செய்யக்கூடிய நிலையிலும் சுமார் 800 ஏக்கர் குறையாமல் உள்ளது.
எனவே, விவசாயிகள் அவசரத்தை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்’ என்றனர்.
பேச்சுவார்த்தை
மேலும் இதுகுறித்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மல்லவாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story