அரசின் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை உறுதி செய்யுங்கள்; அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு
அரசின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்த நிலையில் அதனை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் கட்டுமான வேலை, தொழிற்சாலைகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்மராட்டியத்தை கொரோனா நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. இங்கு நாள்தோறும் பதிவாகும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மலைப்பையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. நாட்டிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக விளங்குகிறது. நோய் பரவல் சங்கிலியை உடைக்க மாநில அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். அதாவது புதிதாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
கட்டுமான வேலைஇந்த புதிய கட்டுப்பாடுகளின் படி அத்தியாவசிய சேவைகளுக்காக பஸ், ரெயில் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. கட்டுமான பணிகளை தொடரலாம். ஆனால் கட்டுமான பணியிடத்தில் வேலை செய்பவர்களுக்கு தங்குமிடம் அமைத்து கொடுக்கப்பட வேண்டும். இதேபோல தொழில்சாலைகளும் இயங்கலாம். ஆனால் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் அல்லது போக்குவரத்து வசதியை அந்த நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.
சாலையோர உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல மருந்தகங்கள், பால், காய்கறி, பழ வியாபாரம், மளிகை கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. திருமணத்துக்கு 25 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அமலுக்கு வந்ததுஇந்த புதிய உத்தரவு நேற்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்து விட்டது. மே 1-ந் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும். இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மந்திரிகள், மண்டல கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய கட்டுப்பாடுகளை திறம்பட அமல்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
உருமாறிய கொரோனா பரவுவதையும், இளைஞர்களை அதிகளவில் தொற்று பாதிப்பதையும் முதல்-மந்திரி சுட்டிக்காட்டினார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திதர வேண்டும் என்றும், ஆக்சிஜன் நிலவரம் குறித்து டாக்டர்கள் அவ்வப்போது புள்ளிவிவரத்தை மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.