உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது
ஊட்டி-கூடலூர் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது.
ஊட்டி,
ஊட்டி-கூடலூர் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது.
தரைமட்ட பாலம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இங்கு சீசன் காலங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
இந்த சாலையில் ஊட்டி அருகே தலைகுந்தாவில் தரைமட்ட பாலம் உள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் வனப்பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் அந்த பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக காமராஜ் சாகர் அணைக்கு செல்கிறது.
அப்போது வெள்ளம் பெருக்கெடுத்தால் மண் அடித்து வரப்பட்டு, பாலத்தின் அடியில் படிந்து வந்தது. இதனால் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் செல்ல முடியாமல் பாலத்தின் மீது தேங்குவது வாடிக்கையானது. அதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.
கட்டுமான பணி
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சேகரமான மண்ணை தூர்வாரவும், உயர்மட்ட பாலம் கட்டவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தரைமட்ட பாலத்தை இடித்துவிட்டு உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் குறுக்கே குழி தோண்டப்பட்டு உள்ளது. அங்கு கான்கிரீட் போடப்பட்டு, தரைமட்டத்தில் இருந்து மழைநீர் எளிதில் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் வேறு வழியாக செல்லவும், பணி தடைபடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
விரைந்து முடிக்க கோரிக்கை
பாலத்தின் கீழ் பகுதியில் பெரிய குழாய்கள் பொருத்தப்பட்டு, மழைநீர் தேங்காமல் செல்ல வழிவகை செய்யப்படுகிறது. பாலத்தை உயர்த்தி கட்டும் பணி நடந்து வருவதால், பக்கவாட்டில் வாகனங்கள் செல்வதற்காக மண் கொட்டி மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு இருக்கிறது. கோடை மழை மற்றும் பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பு இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story