கொரடாச்சேரி ஒன்றியத்தில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்


கொரடாச்சேரி ஒன்றியத்தில் கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 April 2021 7:54 PM IST (Updated: 15 April 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி ஒன்றியத்தில், கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரடாச்சேரி, 

திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஆற்றுப் பாசனத்தை நம்பியே நெல் சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் மட்டும் ஆழ்துணை கிணறு அமைத்து அதன் மூலம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒவ்ெவாரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஆறுகளில் தண்ணீர் வரத்து இருக்காது. ஜூன் மாதம் 12-ந் தேதியோ அல்லது அந்த மாத இறுதியிலோ மேட்டூர் அணை திறந்து விடப்பட்டு ஆறுகளில் தண்ணீர் வரும். அதனால் சம்பா நெல் சாகுபடி முடிந்து அதன் பின்னர் பயறு, உளுந்து சாகுபடி நடைபெறும். சில இடங்களில் பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

கோடை நெல் சாகுபடி

ஆழ்துளை கிணறு வசதி உள்ள இடங்களில் மட்டும் கோடை நெல் சாகுபடி செய்யப்படும். மற்ற இடங்களில் சாகுபடி பணிகள் மேற் கொள்ளாமல் விவசாயிகள் வெறுமனே நிலத்தை விட்டு வைத்திருப்பார்கள். அந்த வகையில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் மட்டும் கோடை நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

கொரடாச்சேரி ஒன்றியத்தில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி பணிகளை தொடங்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வயல்களில் தண்ணீர் பாய்ச்சி நிலத்தைப் பண்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தேவையான நெல் நாற்றுக்கள் விடப்பட்டு வருகிறது.

மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

ஆழ்குழாய் நீர் பாசனத்திற்கு தட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தேவையான உரம், பூச்சி மருந்துகளை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் உர விலை உயர்வு தங்களை வெகுவாக பாதிக்கும் என்பதால் உரம் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story