மங்களூரு அருகே படகு விபத்து; மாயமான மணப்பாடு மீனவரை மீட்கக்கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு
மங்களூரு அருகே நடந்த படகு விபத்தில் மாயமான மணப்பாடு மீனவரை மீட்கக்கோரி அவரது உறவினர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி, ஏப்:
மங்களூரு அருகே நடந்த படகு விபத்தில் மாயமான மணப்பாடு மீனவரை மீட்கக்கோரி, அவரது உறவினர்கள் மாவட்ட கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.
14 மீனவர்கள்
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் இருந்து ஜாபர் என்பவருக்கு சொந்தமான 'அரப்பா' என்ற மீன்பிடி விசைப்படகில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 மீனவர்கள் என மொத்தம் 14 மீனவர்கள் கடந்த 11-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடந்த 13-ந் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே ஆழ்கடல் பகுதியில் சுமார் 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 'ஏபிஎல் லீ ஹவாரே' என்ற சரக்குக் கப்பல் மீன்பிடிப் படகு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற மீனவரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் தாஸ் என்ற மீனவரும் விபத்து ஏற்படுத்திய கப்பல் ஊழியர்களாலே பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டனர். மேலும் மூன்று மீனவர்களது உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளன.
காணவில்லை
இதில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ காலனியை சேர்ந்த டென்சன் உள்பட 9 மீனவர்களை காணவில்லை. இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மனு
இந்த நிலையில் விபத்தில் மாயமான தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவர் டென்சனை விரைவாக மீட்கக் கோரி அவரது மனைவி ராணி, 2 மகள்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
அந்த மனுவில், இங்கே உரிய மீன்பிடி தொழில் இல்லாத காரணத்தால் டென்சன் கேரள மாநிலத்துக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார். தற்போது கடலில் ஏற்பட்ட விபத்தில் அவர் மாயமாகி உள்ளார். அவரை நம்பி தான் எங்கள் குடும்பமே உள்ளது. எனவே, அவரை விரைவாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்”் என்று கூறி உள்ளனர்.
கனிமொழி எம்.பி.
இந்நிலையில் இதுதொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அவசர மனுவை மெயில் மூலம் அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில், “கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே கடலில் சிங்கப்பூர் கப்பல் மோதி படகு கவிழந்த விபத்தில் 2 மீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்டு உள்ளனர். 3 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தமிழக மீனவர்கள் உள்ளிட்ட 9 பேரை காணவில்லை. அவர்களை விரைவாக பத்திரமாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story