விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை
தேனி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. போடிமெட்டு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
தேனி:
பலத்த மழை
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தேனியில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
நேற்று முன்தினம் பிற்பகலில் போடியில் சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு 8 மணியளவில் போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய இந்த மழை நீடித்தது.
அதுபோல், தேனி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தின் பல இடங்களிலும் சாரல் மழை பெய்தது. பின்னர் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மண் சரிவு
மாலை 4 மணியளவில் தேனியில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது.
அதுபோல், தேவாரம், உத்தமபாளையம், போடி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்தது.
நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் போடிமெட்டு மலைப்பாதையில் 4-வது கொண்டை ஊசி வளைவில் மண்சரிவு ஏற்பட்டது.
மேலும், போடி கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து ஏற்பட்டது. கோடை வெயிலை விரட்டிய மழையால் மாவட்டத்தில் நேற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மின்கம்பங்கள் சாய்ந்தது
கூடலூர் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் சாலையின் குறுக்கே மின்சார வயர்கள் தாழ்வாக கிடந்தன. அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து கூடலூர் மின்வாரியத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போலீசார் மற்றும் மின்வாரியத்தினர் அங்கு விரைந்து வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் கூடலூர் பகுதி முழுவதும் மின் வினியோகம் தடைப்பட்டு இருளில் மூழ்கியது.
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
போடி-74.60, ஆண்டிப்பட்டி-10.6, அரண்மனைப்புதூர்-2, கூடலூர்-2.2, மஞ்சளாறு-4, பெரியகுளம்-3, சோத்துப்பாறை-15, உத்தமபாளையம்-1, வைகை அணை-5, வீரபாண்டி-7.8 என மழையளவு பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story