குரங்கு நீர்வீழ்ச்சி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குரங்கு நீர்வீழ்ச்சி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 April 2021 10:59 PM IST (Updated: 15 April 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறையில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

பலத்த மழை

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்கு பெய்தது. இதன் காரணமாக சோலையார், பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட அணைகளும், தொகுப்பு அணைகளும் நிரம்பி முழுகொள்ளளவை எட்டின. 

கடந்த சில மாதங்களாக மழை பொழிவு இல்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்தது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் குளங்கள், அணைகளில் நீர் குறைந்தது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில்  இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. 

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

மழைக்கு இடையே வீசிய பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடைப்பட்டது. 

பின்னர் மின்வாரிய ஊழியர்கள் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி மட்டுமல்லாமல் ஆனைமலை, நெகமம், சுல்தான்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் மழை பெய்தது. கன மழையின் காரணமாக பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 830 கன அடியும், ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 303 கன அடியும் நீர்வரத்து உள்ளது. 

குரங்கு நீர்வீழ்ச்சி 

மேலும் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடந்த குரங்கு நீர்வீழ்ச்சிக்கு மீண்டும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதிய வேளையில் வால்பாறை பகுதியில் மழை பெய்தது. மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரமாக கொட்டித்தீர்த்தது. 

துளிர்விடும் தேயிலை செடிகள் 

பின்னர் இரவு 10 மணி வரை லேசாக தூறிக்கொண்டே இருந்த மழை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மீண்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக இங்கு நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர் நிலவி வருகிறது.

 
இந்த மழை காரணமாக வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகளில் இளம் கொழுந்து துளிர்விட்டு வளர தொடங்கி உள்ளது. 

இதனால் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

 தற்போது வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால் சமவெளி பகுதியில் நிலவும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வரத்தொடங்கி உள்ளனர். 

மழையளவு 

மழை அளவு விவரம் வருமாறு:-

சோலையார் 4 மி.மீ., பரம்பிக்குளம் 37 மி.மீ., ஆழியாறு 67.6, திருமூர்த்தி 54 மி.மீ., அமராவதி 1 மி.மீ., வால்பாறை 26 மி.மீ., மேல்நீராறு 36 மி.மீ., கீழ்நீராறு 40 மி.மீ., காடம்பாறை 9 மி.மீ., சர்க்கார்பதி 35 மி.மீ., வேட்டைக்காரன்புதூர் 18.8 மி.மீ., மணக்கடவு 55.2 மி.மீ., தூணக்கடவு 32 மி.மீ., பெருவாரிபள்ளம் 38 மி.மீ., அப்பர் ஆழியாறு 24 மி.மீ., நவமலை 29 மி.மீ., நெகமம் 9 மி.மீ., நல்லாறு 25 மி.மீ., சுல்தான்பேட்டை 2 மி.மீ.


Next Story