தோகைமலை அருகே கோர்ட்டு பெண் ஊழியருடன் கள்ளக்காதலன் தற்கொலை
தோகைமலை அருகே கோர்ட்டு பெண் ஊழியருடன் கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்டார். உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளத்தொடர்பு
கரூர் மாவட்டம், தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நாகனூர் ஊராட்சி நல்லாகவுண்டம் பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). மாட்டு வியாபாரி. இவருக்கு திருமணமாகி பொம்மியம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
அதே ஊராட்சி கலிங்கப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் சிவபாக்கியம் (28). இவர் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வந்தார். சிவபாக்கியம் கொசூர் ஊராட்சி ஓட்டப்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். இந்தநிலையில் ஆறுமுகம் கலிங்கப்பட்டிக்கு மாட்டு வியாபாரத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது ஆறுமுகத்திற்கும், சிவபாக்கியத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நீண்டகாலமாக பழகி வந்தனர்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகத்தின் தோட்டத்தில் சிவபாக்கியம் விஷம் குடித்தும், ஆறுமுகம் துப்பட்டாவால் தூக்குப்போட்டும் தற்கொலை செய்து கொண்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது 2 பேரும் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அங்கு கூடினர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆறுமுகம், சிவபாக்கியம் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
ஆறுமுகத்தின் உடலை போலீசார் கைப்பற்றியபோது, அவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில், ஆறுமுகம் மாட்டு வியாபாரம் தொடர்பாக யார், யாருக்கு? பணம் கொடுக்க வேண்டும் மற்றும் பணம் வாங்கவேண்டியவர்கள் விவரங்களை எழுதி இருந்தார். மேலும், எனது 3 குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எனது ஆத்மா சாந்தி அடைய 2 பேரின் உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும், எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆறுமுகத்தின் உறவினர் பழனிசாமி என்பவர் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story