கண்ணமங்கலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் திருட்டு
கண்ணமங்கலம் அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்
நிலத்துக்கு சென்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த இரும்பிலி கிராமத்தில் உடையான்குட்டை பகுதியில் உள்ள மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45), விவசாயி. இவர் மனைவி கண்ணகி (42). மகன் ஹரிஷ் (17). இவரது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தனது நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக குணசேகரன் தனது மனைவி, மகனுடன் சென்றுவிட்டார். இரவு அங்கேயே தங்கி உள்ளனர். நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர்.
60 பவுன் நகை திருட்டு
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவும் திறந்திருந்தது.
பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.
இதுகுறித்து குணசேகரன் கண்ணமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஆரணி துணைபோலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணை
மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். நகை- பணத்தை திருடிய மர்ம நபர்கள் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி உள்ளனர். அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story