45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் கூறினார்.
கரூர்
ஆய்வுக்கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு முதன்மைச்செயலரும், கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலருமான விஜயராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்து பேசினார். அப்போது கூறியதாவது:-
வழிகாட்டு நெறிமுறைகள்
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதனரால் முககவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கட்டாயமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
24 மணி நேரமும்...
கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், திரையரங்கு வளாகங்கள், வணிகவளாகத்தில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையங்குகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட தெரிவிக்கப்படுகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
45 வயதிற்கு மேற்பட்டவர்கள்
கரூர் மாவட்டத்தில் 45 வயதிற்கு அதிகமானவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை கணக்கிட்டு அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் ஓய்வூதியம் பெறும் நபர்கள் குறித்த விபரங்களை வைத்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கென்று பிரத்யேகமாக தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்த வேண்டும்.
கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
கொரோனா தொற்று கண்டறியப்படுபவர்களின் வீடுகளைச் சுற்றி கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். தொற்றுள்ள நபரிடம் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும், தொற்றுள்ள நபர் வசித்து வந்த பகுதியில் உள்ள வயதானவர்கள், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டத்தில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், குளித்தலை சார் ஆட்சியர் ஷேக்அப்துல் ரகுமான், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story