நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அலங்கார தொழிலாளர்கள் முற்றுகை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அலங்கார தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அலங்கார தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட சுவாமி அலங்கார தொழிலாளர் சங்கத்தினர் தலைவர் அழகுராஜ் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தொழில் பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் சுவாமி அலங்காரம் செய்யும் தொழிலாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கோவில் விழா காலங்களில் சுவாமிக்கு அலங்காரம் செய்து வாழ்வாதாரத்தை காத்துவரும் நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது கோவில் கொடை விழா சீசன் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா பரவுவதால் கோவில் திருவிழாக்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் எங்கள் தொழில் கேள்விக்குரியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஊரடங்கின் போதும் எங்கள் தொழிலாளர்களுக்கு எந்த நிதி உதவியும் அளிக்கப்படவில்லை.
அனுமதி வேண்டும்
எனவே கட்டுப்பாடுகளுடன் கோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் எங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கொரோனா நிவாரணமாக வழங்க வேண்டும்.
கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story