மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை


மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 16 April 2021 12:18 AM IST (Updated: 16 April 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 250 விசைப்படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

கடலூர்முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், அக்கரை கோரி, ராசாபேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 100-க்கும் அதிகமான விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி  லாரிகள் மூலம் கேரளா, கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்வார்கள். 
 நாளொன்றுக்கு சராசரியாக 100 டன் அளவிற்கு கடலூர் துறைமுகத்திற்கு மீன் வரத்து இருக்கும். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் மீன்பிடி தடைகாலம் 45 நாட்கள் மட்டுமே அமலில் இருந்து வந்தது. தற்போது 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெறிச்சோடியது

அதன்படி இந்தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியது. இதன் காரணமாக நேற்று முதல் கடலூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடை காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள், படகுகளில் உள்ள மோட்டார்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுக பகுதி நேற்று ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இதனால் கடற்கரையில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Next Story