நெல்லை-தூத்துக்குடி வழித்தடத்தில் அனைத்து நிறுத்தங்களிலும் பஸ்கள் நின்று செல்ல ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லை தூத்துக்குடி வழித்தடத்தில் அனைத்து நிறுத்தங்களிலும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,ஏப்
நெல்லை-தூத்துக்குடி வழித்தடத்தில் அனைத்து நிறுத்தங்களிலும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இடைநில்லா பஸ்கள்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த பொன்.காந்திமதிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நெல்லை முதல் தூத்துக்குடி வரை 32 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் அரசு பஸ் ஒன்றும், 2 தனியார் பஸ்களும் முறையான அனுமதியுடன் இடை நில்லா பஸ்களாக இயக்கப்படுகின்றன. ஆனால் போக்குவரத்து துறையிடம் முறையான அனுமதி பெறாமல் பல இடை நில்லா பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த 2 ஊர்களுக்கும் இடையில் உள்ள 32 பஸ் நிறுத்தங்களில் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை. இதனால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என பல தரப்பட்டவர்களும் உரிய நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடிவதில்லை.
இந்த நிறுத்தங்களில் ஒரு சில சாதாரண பஸ்கள் மட்டும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விடும்போது, அந்த பஸ்களில் அதிக அளவு பயணிகள் கூட்டம் கூட்டமாக பயணிக்கும் அவல நிலை ஏற்படுகிறது.
அரசுக்கு வருவாய் இழப்பு
இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் பலன் இல்லை. பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அவர்களிடம் தற்காலிகமாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான நிலையை ஏற்படுத்தினர். ஆனால் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. சட்ட விரோதமாக பஸ்கள் இயக்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை.
எனவே ஏராளமான கிராம மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு நெல்லை-தூத்துக்குடி வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அனைத்தும், அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் நின்று செல்லவும், உரிய அனுமதியின்றி பஸ் இயக்கினால் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், அனுமதி பெறாமல் இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டால் அவற்றை ரத்து செய்ய வேண்டும்.
அந்த வழியாக செல்லும் பஸ்கள் 32 பஸ் நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். நெல்லை-தூத்துக்குடி பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் புறப்பட்ட பின்பு தான், தனியார் பஸ்கள் புறப்பட வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story