தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமல் 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு


தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமல் 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு
x
தினத்தந்தி 16 April 2021 1:11 AM IST (Updated: 16 April 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்:-

தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். 

மீன்பிடி தடை காலம்

மீன் இனப்பெருக்க காலம் எனக்கூறி மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்தி வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வந்தது. 
அதன் பின்னர் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

மீனவர்கள் கோரிக்கை

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 
இதையடுத்து இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தடை காலத்தை அமல்படுத்த வேண்டும். பழையபடி தடை காலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் இந்த ஆண்டு தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

10 ஆயிரம் பேர் வேலையிழப்பு

அதன்படி நேற்று முதல் தடைகாலம் தொடங்கி உள்ளது. தடைகாலத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 146 விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
படகுகளை மீனவர்கள் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தடை காலம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், மீன்வியாபாரிகள், துறைமுகங்களில் கடைவைத்து தொழில் நடத்துபவர்கள், கருவாடு வியாபாரிகள், ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 10 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.

Next Story