முகக்கவசம் அணியாத 209 பேருக்கு தலா ரூ.200 அபராதம்
முகக்கவசம் அணியாத 209 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு நடத்தினார்.
கோவை
முகக்கவசம் அணியாத 209 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு நடத்தினார்.
கொரோனா பரவல்
கோவையில் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், கோவை அவினாசி ரோடு நவ இந்தியா, பீளமேடு, மசக்காளிபாளையம் ரோடு, உள்ளிட்ட பல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேற்று நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், அங்குள்ள கடைகளில் முகக் கவசம் அணியாத ஊழியர்கள், நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.
பஸ்களில் ஏறி ஆய்வு
இதையடுத்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் சென்று அங்கு கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அவர், பஸ்களில் ஏறி பயணிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா? என்று பார்வையிட்டார். அப்போது, அவர், சில பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கினார்.
மேலும் அவர், பஸ் டிரைவர் கண்டக்டர்களிடம் பயணிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 5 மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், முகக் கவசம் அணியாத 209 பேருக்கு ரூ.200 வீதம் மொத்தம் ரூ.41,800 அபராதம், கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story