திருமண மண்டபங்களில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வலியுறுத்தி சேலத்தில் ‘டெக்கரேட்டர்ஸ்’ நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருமண மண்டபங்களில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வலியுறுத்தி சேலத்தில் ‘டெக்கரேட்டர்ஸ்’ நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
திருமண மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50 சதவீதம் பேர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தினர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க மாவட்ட தலைவர் அருண்பிரசாத் தலைமை தாங்கினார். செயலாளர் சாலமன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விரைவில் முகூர்த்த நாட்கள் தொடங்க உள்ளது. அதற்குள் கோரிக்கையை பரிசீலித்து நல்ல தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ‘திருமணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பந்தல், மேடை அமைத்தல், சமையல் கலைஞர்கள், வாடகை பாத்திர கடை வைத்து இருப்பவர்கள் என தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளோம். ஊரடங்கால் வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து உள்ளோம். கடந்த 2 மாதமாக எங்கள் தொழில் ஓரளவு நடைபெற்று வருகிறது. தற்போது திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே திருமண மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50 சதவீதம் பேர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story