செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டி அம்மன் கோவில் குண்டம் விழா; ஆண்கள் மட்டுமே தீ மிதித்து நேர்த்திக்கடன்


செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டி அம்மன் கோவில் குண்டம் விழா; ஆண்கள் மட்டுமே தீ மிதித்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 16 April 2021 4:26 AM IST (Updated: 16 April 2021 4:26 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் செல்லியாண்டி அம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

அந்தியூர்
அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் செல்லியாண்டி அம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டுமே தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 
செல்லியாண்டி அம்மன்
அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவுக்காக கடந்த மாதம் 31-ந் தேதி கோவிலில் பூச்சாட்டப்பட்டது. 
அதைத்தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்றம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றது. 
பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார்கள். கோவில் வளாகத்தில் தீர்த்த குடங்கள் ஏலம் விடப்பட்டன. 
குண்டம் 
மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கு தீர்த்த குடங்கள் ஏலம் போனது. அதை ஏலம் எடுத்தவர் தீர்த்த நீரில் விளக்கேற்றினார்.  அதைத்தொடர்ந்து குண்டம் விழா நடைபெற்றது. 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டு இருந்த அந்த குண்டத்தில் உடலில் பூ சுற்றிக்கொண்டும், கையில் பிரம்பு வைத்தபடியும் ஆண்கள் மட்டும் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 
ெபண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனுக்கு படைத்தார்கள். பக்தர்கள் பலர் அலகு குத்திக்கொண்டு, கையில் அக்னிசட்டி ஏந்தி வந்தார்கள். 
மஞ்சள் நீராட்டு
மாலை 4 மணி அளவில் கம்பம் பிடுங்கி ஊர் பொதுக்கிணற்றில் போடப்பட்டது. அதன்பின்னர் மஞ்சள்நீராட்டு நடைபெற்றது. ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்ந்தார்கள்.  அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க செல்லியாண்டி அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 
அந்தியூர், தவுட்டுப்பாளையம், சந்தியபாளையம், பள்ளிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள். 

Next Story