திருமுல்லைவாயலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி போலீசை கண்டதும் கொள்ளையன் ஓட்டம்


திருமுல்லைவாயலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி போலீசை கண்டதும் கொள்ளையன் ஓட்டம்
x
தினத்தந்தி 16 April 2021 7:53 AM IST (Updated: 16 April 2021 7:53 AM IST)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையன், ரோந்து போலீஸ்காரர் வந்ததை கண்டதும் தப்பி ஓடிவிட்டதால் ரூ.20 லட்சம் தப்பியது.

ஆவடி, 

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் குளக்கரை தெருவில் தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கொள்ளையன் ஒருவன், ஏ.டி.எம். மையத்தின் உள்ளே புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்ற திருமுல்லைவாயல் போலீஸ்காரர் முரளி, ஏ.டி.எம். மையத்துக்குள் இருந்து சத்தம் வருவதை கண்டு மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார்.

போலீசை கண்டதும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்த கொள்ளையன், அங்கிருந்து தப்பி ஓடினான். போலீஸ்காரர் முரளி கொள்ளையனை விரட்டிச்சென்றார். அதற்குள் கொள்ளையன், இருட்டான பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பார்வையிட்டனர். அதில் கொள்ளையன் ஏ.டி.எம். எந்திரத்தை மட்டும் உடைத்து இருப்பது தெரிந்தது. பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. நல்லவேளையாக அதற்குள் ரோந்து போலீஸ்காரர் வந்துவிட்டதால் அதில் இருந்த ரூ.20 லட்சம் தப்பியது.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை வைத்து அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story