விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வையுங்கள்; பிரதமர் மோடிக்கு, உத்தவ் தாக்கரே கடிதம்


விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வையுங்கள்; பிரதமர் மோடிக்கு, உத்தவ் தாக்கரே கடிதம்
x
தினத்தந்தி 16 April 2021 10:11 AM GMT (Updated: 16 April 2021 10:11 AM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விமானப்படை விமானங்களை பயன்படுத்தி மராட்டியத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

பற்றாக்குறை நிலவுகிறது

மராட்டிய மாநிலத்தை கொரோனா 2-வது அலை காரணமாக நோயாளிகள் அலை அலையாய் ஆஸ்பத்திரிகளை நாடி செல்கின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டும் இன்றி நோய் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா நோயாளிகளின் மூச்சு திணறலை தவிர்க்க ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் மராட்டியத்தில் தனியார் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆக்சிஜனும் மருத்துவ தேவைக்கு பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பற்றாக்குறையை சமாளிக்க முடியவில்லை.

10 பேர் உயிரிழப்பு

இதற்கிடையே கடந்த 13-ந் தேதி நாலச்சோப்ராவில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் 10 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். இவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதேபோல சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில், “கொரோனா அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வழங்கக்கோரி அண்டை மாநிலங்களை அணுகினோம். ஆனால் அங்கும் அதிக தேவை இருப்பதால் அவர்கள் இயலாமையை வெளிப்படுத்தி உள்ளனர்” என்றார்

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

இரட்டிப்பாகும்...

மராட்டியத்தில் தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்த 15 நாட்களில் இரட்டிப்பாகும் ஆபத்து உள்ளது.தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. வருகிற ஏப்ரல் 30-ந் தேதி இந்த எண்ணிக்கை 11 லட்சத்து 90 ஆயிரமாக அதிகரிக்கும்.இதேபோல தற்போது ஒருநாளைக்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை ஒருநாளைக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனுப்பி வையுங்கள்

ஆனால் அண்டை மாநிலங்கள் வழியாக மருத்துவ திரவ ஆக்சிஜனை கொண்டு வருவதில் பல தடைகள் உள்ளன. எனவே நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள இரும்பு ஆலைகளில் இருந்து ஆச்சிஜனை விமானத்தில் கொண்டுவர தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கவேண்டும்.ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி ஆக்சிஜன் கொண்டுவந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story